இந்தியாவில் இருந்து ஒரு டீசல் கப்பலும் சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையும் சாத்தியம்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக நான்கு எரிபொருள் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் இந்தியாவின் பெற்றோலிய இயற்கை வாயு, வீடமைப்பு மற்றும் நகர அலுவல்கள் அமைச்சர் ஹர்திப் சிங் பூரிக்கும் இடையில் புதுடில்லியில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்புத் தொடர்பில் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் மிலிந்த மொறகொட அங்கு இந்திய அமைச்சரிடம் தெளிவுபடுத்தினார். எரிபொருள் இறக்குமதிக்காக கடனாக வழங்கப்பட்ட உதவிக்காக உயர்ஸ்தானிகர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை விநியோகிப்பது தொடர்பில் இந்திய அமைச்சர் சாதகமான கருத்தை வெளியிட்டதாகவும் இந்தத் தீர்மானம் மிக்க சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க இணங்கியதாகவும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் எரிபொருள் துறையின் ஒத்துழைப்பை விருத்தி செய்யக்கூடிய முறை குறித்தும் அங்கு கவனம் செலுத்தப்பட்டது. இரண்டு டீசல் கப்பல்களையும் இரண்டு பெற்றோல் கப்பல்களையும் கொள்வனவு செய்வதற்கும் அங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதில் டீசல் கப்பலை விரையில் இலங்கைக்கு அனுப்ப இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தக் கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 10-12 நாட்கள் எடுக்கும்.
பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இடையில் ஆரம்பமான பேச்சுவார்த்தையும் வெற்றியளித்துள்ளது. இதன்படி, சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.