இன்று முதல் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகம்
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்படி ஜுலை மாதம் 10ம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும். ஏனைய நடவடிக்கைகளுக்காக எரிபொருள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார். பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் பஸ் சேவைகளைப் பயன்படுத்தாமல் பாடசாலைகளை இயக்குவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஏனைய பாடசாலைகளை ஜுலை 10ம் திகதியின் பின்னர் திறக்க முடியும். ஜுலை 10ம் திகதி முதல் தொடர்ச்சியாக எரிபொருள் மற்றும் கேஸ் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குறுந்தூர பஸ் சேவைகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பஸ் வண்டிகள் போதியளவில் சேவையில் ஈடுபடும் என சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அதனால் விதிக்கப்பட்டுள்ள வரையறைகள் காரணமாக பஸ் சேவைக்கு எந்தவிதத்திலும் தடங்கல் ஏற்படாது. இதேவேளை, சாதாரண கால அட்டவணைக்கு அமைய ரெயில் சேவை இடம்பெறும் என்று ரெயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.