அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான சுற்றுநிருபம் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பான சுற்றுநிருபம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் இணையதளத்தில் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முடியும். அதிகளவிலான அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைக்கு அமைய இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஓய்வூதியத்திற்கோ, தொழிலின் சிரேஷ்ட நிலைக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில், ஐந்து வருடங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும். அரச சேவையில் புதிதாக இணைந்து கொண்ட நன்னடத்தை காலப்பகுதியை பூர்த்தி செய்யாதவர்களுக்கும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பியதன் பின்னர் நன்னடத்தைக் காலத்தை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு இவர்களுக்கு காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே தெரிவித்துள்ளார். நிறைவேற்றுத்தரம், அரச செலவில் பயிற்சிகளை பெற்ற அதிகாரிகளுக்கு இதன் கீழ், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்.