மருந்துத் தட்டுப்பாடு தொடர்பாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லையென்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் பாரிய அளவிலான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல நிராகரித்துள்ளார். நாட்டில் தற்சமயம் மருந்துகளுக்கு பாரிய அளவிலான தட்டுப்பாடுகள் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு இது பற்றி விளக்கமளித்தார். நாட்டில் உள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்து வகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சில மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அவற்றுக்கான மாற்றீடு மருந்துகள் காணப்படுவதால் எந்தவொரு நோயாளர்களுக்கும் சிகிச்சை வழங்குவதற்கான வசதி காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். மருந்து இறக்குமதிக்காக இலங்கை வருடாந்த 26 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவிடுகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுகாதார துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்றவும் அத்தியாவசிய உணவு வகைகளை விநியோகிக்கவம் அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் ஐந்து கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்ததாகவும் அமைச்சர் கூறினார். நாட்டில் அடுத்த வருட நடுப்பகுதி வரை அல்லது 2024ஆம் ஆண்டு முதற்பகுதி வரை நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.