அரசியல் அமைப்பின் 21ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவிப்பு
அரசியல் அமைப்பின் 21ஆவது சீர்திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, அந்த சரத்துக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையும், மக்கள் கருத்துக் கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, பொதுமக்கள் தற்சமயம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். தனியார் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ள நிலையில், அரச பணியாளர்களும் இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறு மற்றும் மத்தியதர வியாபாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு பாராளுமன்றம் உரிய தீர்வை மேற்கொள்ளாததன் காரணத்தினால், இந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். 11 கட்சிகளினால் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வுகாணும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதன் போது தெரிவித்தார்.
எனினும், தற்போதைய பிரதமருக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டிற்கு தற்போது பிரதான எதிரி, பொருளாதார பிரச்சினையே. அதற்கு பொறுப்புடன் முகங்கொடுக்க வேண்டும். இதனால், பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தின் ஊடாக அழுத்தம் கொடுக்கப்படும் என விமல் வீரசன்ச குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத ஒரு இடமாக மாறியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் கூடினாலும், நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இவ்வாறான நிலையில், பாராளுமன்றம் கூடாமல் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தேடுவது உசிதம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.