சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் சிங்கப்பூருக்கான இரண்டு நாள் விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடந்த 8ஆம், 9ஆம் திகதிகளில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஒருவரின் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெற்றது.
இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது. 2022 ஜூன் 13ஆம் திகதி சிங்கப்பூரின் துணைப் பிரதமராக பதவியேற்கவிருக்கும் சிங்கப்பூரின் நிதி அமைச்சர் லோரன்ஸ் வோங்கையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்தார். கலந்துரையாடலின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கான நிதியுதவியைப் பெறுவதற்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும், சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவி கோரினார். சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவையும் அமைச்சர் கோரினார். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.