எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்கிறது
எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்திய கடனுதவியின் கீழ், இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 36 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலும், 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலும் தரையிறக்கப்படுகின்றன. எரிபொருளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை இலங்கை வரவிருக்கிறது. இந்திய கடன் வசதியின் கீழ், 50 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன. இலங்கைக்கு வழங்கப்படும் 50 சதவீதமான எரிபொருள் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் கடல் எல்லையில் நங்கூரமிடப்பட்டிருந்த 500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டிருக்கிறது. இதன் பெறுமதி ஐந்து கோடி அமெரிக்க டொலர்களை தாண்டுகிறது. இந்தக் கப்பலிலிருந்து டீசலை தரையிறக்கும் நடவடிக்கை இன்று பிற்பகல் ஆரம்பமாகவிருக்கிறது. தரையிறக்கப்படும் டீசல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பகங்களுக்கு அனுப்பப்படவிருக்கிறது.