உக்ரேனுக்கு பல நாடுகள் ஆயுத உதவி. நிலைமை மேலும் மோசமடையும் நிலை – ரஷ்யா தொடர்ந்தும் ஏவுகணைத் தாக்குதல்
ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போராடுவதற்காக உக்ரேனுக்கு ஆயுதத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக நிதியுதவி வழங்கப்படுமென்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் சிட்னியில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் உள்ள உக்ரேன் நாட்டவர்கள் பலர் கலந்து கொண்டனர். உக்ரேனில் விசாவிற்காக விண்ணப்பிப்பதற்கு எதிர்காலத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் கருத்து வெளியிடுகையில், உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்குப்பதிலாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென்று தெரிவித்தார்.
ஜேர்மன் நாடு யுத்த தாங்கிகளை அழிக்கும் ஆயிரம் குண்டுகளையும், தரையிலிருந்து தாக்கக்கூடிய 500 ஏவுகணைகளையும் உக்ரேனுக்கு வழங்க முன்வந்துள்ளது. நெதர்லாந்தும் ஆயுதங்களை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதேவேளை பிரான்ஸ், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட யுத்தத் தாங்கிகளை அழிக்கக்கூடிய 4 ஆயிரம் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. இதேவேளை உக்ரேன் தலைநகருக்கு அருகாமையில் எரிபொருள் களஞ்சியசாலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தீயினால் அந்தப் பகுதியில் விஷ எரிவாயு பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தலைநகருக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் 6 குழந்தைகள் உயரிழந்துள்ளன. இதேவேளை, ரஷ்ய – உக்ரேன் மோதலில் சமாதான முயற்சியில் ஈடுபட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.