இலங்கைக்கும் – துருக்கிக்கும் இடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை
இலங்கைக்கும் – துருக்கிக்கும் இடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தியிருப்பதாக துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வர்த்தக பல்வகைப்படுத்தல் மூலம் இலங்கையின் பல்வேறு தயாரிப்புகளுக்கு துருக்கி சந்தையில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுமென்றும் அவர் கூறினார்.
இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றி தமது நாட்டின் தொழில் முயற்சியாளர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
அதேவேளை, துருக்கிக்கு விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை இலங்கையில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக துருக்கி வழங்கிய பல்வேறு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது துருக்கிய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.