பயங்கரவாதத்திற்கு திட்டமிட்டமை தொடர்பில் இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தின் பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான வசதிகளுக்கான திட்டம் குறித்த கடித ஆவணத்தை வைத்திருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் ஒன்றிணைக்கப்பட்ட பயங்கரவாத விசாரணைக் குழுவினரால் சிட்னி நகரத்தில் கிங்ஸ்ட்டன் என்ற பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் இருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட கடித ஆவணம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்தப் பிரதேசத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்பட்டதுடன், இவர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மொஹமட் நிஷாம் டீன் என்ற பெயரைக் கொண்ட இவர், மாணவர் விசா அனுமதியின் மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். 25 வயதான இவர், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர் பணியாற்றிய இடத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் பெரரல் பொலிஸ் விசாரணை அதிகாரி மைக்கல் மெக்ரிரான் இது தொடர்பான தெரிவிக்கையில், இவருக்கு எதிரான குற்றச்சாட்டு பாரதூரமானவை என குறிப்பிட்டுள்ளார்.